search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி"

    • ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
    • முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல்

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி மாபியாக்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய இடங்கள், ஏழைகள், நலிவடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு அதிகாரியுடன் தொடர்புடைய இடங்கள் என 22 இடங்களில் சோதனை நடத்தியது. 

    இதில் ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த பண மோசடி வழக்கில் ஹேமந்த் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

    இதேபோல் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு கும்பலால் பிளாட்டுகள் அபகரிக்கப்பட்டிருப்பது  தெரியவந்தது.

    • பணத்துக்கு பதிலாக தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று போலியான ரசீதை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜய ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்தவர் பீர் அனீஸ் ராஜா. பம்மலை சேர்ந்த விஜய ராகவன் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பீர் அனீஸ் ராஜாவை அணுகி தங்களுக்கு எப்.எம். ஒலிபரப்பு நிறுவனங்களிடம் நல்ல தொடர்பு இருப்பதாகவும், அவற்றில் காற்றின் பண்பலைகளை விலைக்கு வாங்கி வியாபார நிறுவனங்களுக்கு விளம்பரத்திற்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    அதற்காக ரூ.1 கோடியே அறுபது லட்சத்திற்கு மேல் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பணத்துக்கு பதிலாக தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று போலியான ரசீதையும் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜய ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி பிரதீபாவை தேடி வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார்.
    • தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 44). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்வதற்காக ஆட்களை தேடி வந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் கூறிய ஆலோசனையின் பேரில் சென்னை கொடுங்கையூர் லெட்சுமி அம்மன் நகரைச் சேர்ந்த ஷீலா என்பவரிடம் செல்போன் மூலம் பேசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சையது இப்ராஹிம் வீட்டுக்கு ஷீலா வந்தார். அவர் தனது லேப்டாப்பில் பலவிதமான வீட்டு அலங்கார படங்களை காண்பித்து சையது இப்ராஹிமை நம்ப வைத்தார்.

    உள் அலங்கார வேலைக்கு மொத்தம் ரூ.26 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அன்றைய தினமே ரூ.5 லட்சமும், அதன் பிறகு பல தவணைகளாக மொத்தம் ரூ.15.50 லட்சம் பணத்தை ஷீலாவுக்கு கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக் கொண்டு அவர் வீட்டு அலங்கார வேலையை செய்து தராமல் ஏமாற்றியுள்ளார். மேலும் செல்போன் இணைப்பையும் துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது இப்ராஹிம் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வருகின்றனர்.

    • தனது நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார்.
    • கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கருத்தானூரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது31). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து ஒரு வாகனத்தை விற்றுவிட்டார்.

    இதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் பணம் கிடைத்தது. அந்த பணத்தை தனது வங்கியில் போட்டிருந்தார்.

    இதையறிந்த அவரது நண்பர் நடூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர் ரூ.3,200 கோடிக்கு ரூ.2ஆயிரம் நோட்டுகளாக வைத்துள்ளார் என்றும், அதனை மாற்ற முடியாமல் தவித்து வருவதாகவும், அதற்காக உன்னிடம் உள்ள ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து ரூ.500 நோட்டுகளாக எடுத்து கொடுத்தால், அதற்கு பதிலாக அவர்கள் ரூ.13 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக தருவார்கள்.

    அதில் ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை சரிசமமாக பிரிந்து கொள்ளலாம் என்று சுரேஷிடம் கூறினார்.

    தனது நண்பர் கூறிய ஆசை வார்த்தையை நம்பிய சுரேஷ் வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அதனை ஒரு பையில் போட்டு வந்தார்.

    அந்த பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று சுரேஷ், அவரது தந்தை நாகராஜ், ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் காரில் தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது 3 பேரும் அந்த முக்கிய பிரமுகரின் ஏஜெண்டை தொடர்பு கொண்டனர். அவர் காரை அங்கேயே விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தான் கூறிய இடத்திற்கு வருமாறு சுரேஷிடம் கூறியுள்ளார்.

    உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏஜெண்டு கூறிய இடத்திற்கு வந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் கையில் பையுடன் அங்கு வந்தனர்.

    அப்போது மர்மநபர்கள் சுரேஷிடம் இருந்து பையை வாங்கி கொண்டனர். அதற்கு பதிலாக மர்மநபர்கள் கொண்டு வந்த பையை சுரேஷிடம் கொடுத்தனர்.

    உடனே மர்ம நபர்கள் சுரேஷிடம் இங்கு இருந்தால் நமக்கு ஆபத்து என்றும், உடனே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய சுரேஷ் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    அப்போது சுரேஷ் சிறிது தூரம் சென்ற பிறகு மர்மநபர்கள் கொடுத்த பையை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக வெள்ளைதாள்கள் பணகட்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    உடனே திரும்பி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று அவர்களை தேடிபார்த்தனர். அதற்குள் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து பணத்துடன் மாயமாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சுரேஷ் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஏரியூர் சீலநாயக்கனூரைச் சேர்ந்த முருகன் (45), அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிராவல்ஸ் அதிபர் ரூ.13 லட்சத்திற்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.10 லட்சத்தை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார்.
    • சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனை கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜாகிர் உசேன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜாகிர் உசேன் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில சீட் வாங்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கடலூரை சேர்ந்த சந்திர மோகன் என்பவர், ஜாகிர்உசேனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உங்கள் மகளுக்கு சீட் வாங்கித் தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை ஜாகிர் உசேன் உண்மை என்று நம்பியுள்ளார். பின்னர் சந்திரமோகன் அவரிடம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறாக ஜாகிர் உசேனிடம் இருந்து சந்திரமோகன் பல தவணைகளாக மொத்தம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியது போன்று மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. தொடர்ந்து ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார். இதனை அடுத்து போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாகிர் உசேன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கருங்கல்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்து வந்த சந்திரமோகனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனை கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர்.

    மேலும் சந்திர மோகனிடம் நடத்திய விசாரணையில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வருவதாகவும் அதன் மூலம் ஜாகிர்உசேனின் எண்ணை அறிந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது கடலூரில் பணம் மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு சிறிது, சிறிதாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கருவலூரை சேர்ந்த 32 வயது பெண், தனது கணவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் கார்கள் விற்பனை செய்வதாக பல கார்களின் புகைப்படங்களை நபர் ஒருவர் அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த பெண், கார்களின் விலை விவரங்களை கேட்டறிந்தார். ரூ.24 லட்சம் செலுத்தினால் சொகுசு கார் வாங்கிக்கொள்ளலாம் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண், சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு சிறிது, சிறிதாக ரூ.24 லட்சத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் தொடர்பு கொண்டு காரை டெலிவரி கொடுக்குமாறு அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் செல்போனை எடுக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது. அதன்பிறகே தான் ஏமாறியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாரில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.

    இந்தநிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஈரோடு நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்த அப்துல் குத்ஜான் (வயது 42) மற்றும் ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த தர்வேஷ் (51) ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், அப்துல் குத்ஜான் இதேபோன்று கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் ஏமாற்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. தர்வேஷ் தனது வங்கிக்கணக்கை கொடுத்து உதவி செய்துள்ளார்.

    • கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
    • வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சூர்யா சலபதி ராவ். இவர் கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார் .

    விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

    மேலும் போலியான சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கினார்.

    இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கடற்படை வளாகத்தில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது.

    சூர்யா சலபதி ராவ் கொடுத்த போலி சான்றிதழ்களுடன் சிலர் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் முகாமில் கலந்து கொண்டனர் .அப்போது முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதில் பல்வேறு பட்டதாரிகளின் சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. போலி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது சூர்யா சலபதி ராவ் சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ராணுவ அதிகாரிகள் சூர்யா சலபதிராவை பிடித்து விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சூர்யா சலபதி ராவை கைது செய்து அவரிடமிருந்து கார், கடற்படை அதிகாரிகளுக்கான உடைகள், செல்போன், லேப்டாப், போலி அடையாள அட்டை, போலி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சூர்யா சலபதி ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (வயது34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.

    இவரை கடந்த மாதம் செல்போனில் ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு சிறந்த ஆபர் உள்ளது. தாங்கள் ஒத்துழைத்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    அதாவது தான் ஒரு குழந்தை பேறு வைத்திய சாலை நடத்தி வருகிறேன். அங்கு வரும் பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும் என கூறவே ஷாஜன், தனது அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

    பின்னர் அவரது செல்போனுக்கு மர்ம நபரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவர் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்காக ரூ.5.5 லட்சம் மற்றும் ரூ.1000 ஆகியவற்றை ஷாஜனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான போலி ஆவணங்களை அனுப்பி விட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கியூ.ஆர். கோர்டை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் வரை பணத்தை செலுத்தி உள்ளார்.

    பின்னர் அந்த மர்ம நபரை ஷாஜன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கெஸ்ட் அவுஸில் வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்த சோகத்தில் புலம்பியபடி இருந்துள்ளார்.

    இது குறித்து புகாரின் பேரில் மாகே இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளரிவெளி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த மோகன் (வயது 55) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளில் சுமார் ரூ.3 கோடியே 15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது.

    இது தொடர்பாக கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மோகன் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சங்க செயலாளர் மோகன், மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார், நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து இது பற்றிய விசாரணை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமாரை கைது செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நள்ளிரவு 1.40 மணி அளவில் கள்ளப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. போலீசார் வருவதை அறிந்து முன்கூட்டியே தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து கைதான மோகன், மணி, ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • ஜெயசீலனின் செல்போன் எண்ணுக்கு அந்த வாலிபர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
    • சிறிது நேரத்திலேயே ஜெயசீலனின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனது.

    சென்னை:

    வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அதுதொடர்பான விவரங்களை கேட்டு வாங்கி மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது.

    அந்த வகையில் புழல் சிறை காவலரான ஜெய சீலனிடம் போனில் குறுஞ்செய்தி அனுப்பிய வட மாநில வாலிபர் ஒருவர் ரூ.13 ஆயிரத்து 700-ஐ பறித்துள்ளார். ஜெயசீலனின் செல்போன் எண்ணுக்கு அந்த வாலிபர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதனை பார்த்ததும் குறுஞ்செய்தி லிங்க்கில் போய் பான் கார்டு மற்றும் வங்கி தொடர்பான விவரங்களை ஜெயசீலன் அளித்துள்ளார்.

    சிறிது நேரத்திலேயே ஜெயசீலனின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமாநிலங்களை சேர்ந்த மோசடி நபர்கள் இதேபோன்று குறுஞ்செய்தியை அனுப்பி தொடர்ச்சியாக பணம் பறிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
    • ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடியை தலைமை இடமாகக்கொண்டு ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.8,000 வரை வட்டியாக பணம் தருவதாக அறிவிப்பு வெளியானது.

    இதற்காக அந்த நிறுவனம் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏஜெண்டுகளை நியமித்தது. ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை வாரி குவித்தது.

    குறிப்பிட்ட காலம் வரை பொதுமக்களுக்கு வட்டி பணம் வழங்கிய நிதி நிறுவனம் திடீரென பணம் தராமல் நிறுத்தியது.

    இது குறித்து புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். வட மாவட்டங்களில் ஐ.எப்.எஸ். நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ. 6,000 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன் பாபு ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் முக்கிய ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம், கார்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஐ.எப்.எஸ். இயக்குனர்களின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலாரில் உள்ள ஐ.எப்.எஸ். நிறுவன இயக்குனர்களின் உறவினர் வீட்டிற்கு காலை 9 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் வங்கி அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர்.

    ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் இருந்து பல கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஆவணங்களை கைப்பற்றி அதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.

    அமலாக்கத்துறை சோதனையால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதே போல் செங்குட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவன இயக்குனரின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.

    நெமிலியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

    இந்த சம்பவத்தால் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

    • ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகாசன வாராந்திர மேல் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவைகள் சிறப்பு வாய்ந்தவை.

    இந்த சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்க்கை பாக்கியமாக கருதப்படுகிறது.

    அதனால் இந்த சேவையை பெறுவதற்கு பக்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மேல் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

    தனது நண்பர்களிடம் மேல் வசீக சேவையில் கலந்து கொள்ள டிக்கெட் கேட்டு வந்தனர்.

    அப்போது திருப்பதியை சேர்ந்த லலித் குமார் என்பவர் விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    வாராந்திர சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை பெற்று தருவதாகவும் ஆன்லைன் மூலம் ரூ.1.04 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். லலித் குமார் அனுப்பிய வங்கி கணக்கிற்கு விஜயகுமார் பணத்தை அனுப்பி வைத்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதிக்கு வந்தனர். அப்போது தரிசன டிக்கெட் பெறுவதற்காக விஜயகுமார், லலித்குமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். லலித் குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட விஜயகுமார் இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.

    சோதனையின்போது 5 பக்தர்கள் ரூ.300 போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் போலி தரிசன டிக்கெட் கொண்டு வந்த பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் ஒப்பந்த ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். திருப்பதியில் நேற்று 76,254 பேர் தரிசனம் செய்தனர். 28,091 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×